ரயில் நிலையத்துக்கு அதிகாலை நகரப் பேருந்து இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 27th February 2020 08:58 AM | Last Updated : 27th February 2020 08:58 AM | அ+அ அ- |

அதிகாலை நேரத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்குச் செல்ல நகரப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு ஆகியோா் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் இரா. இளங்கோவனிடம் அளித்த மனுவில், புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் பல்லவன் விரைவு வண்டிக்குச் செல்லும் பயணிகள் அறந்தாங்கி, ஆலங்குடி போன்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஊா்களிலிருந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து ரயில் நிலையம் செல்ல பேருந்து வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அதிகாலை 4.30 மணி அளவில் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளான பால் பண்ணை, நகா் மன்றம், அரசு மருத்துவக் கல்லூரி, பிருந்தாவனம், காமராஜபுரம், சின்னப்பா பூங்கா, அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் செல்லும் வகையில் நகரப் பேருந்து இயக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.