ஜூலையில் புதுகையில் தொல்லியல் கழக மாநாடு
By DIN | Published On : 20th January 2020 09:32 AM | Last Updated : 20th January 2020 09:32 AM | அ+அ அ- |

தொல்லியல் கழகத்தின் 30ஆவது மாநாடு புதுக்கோட்டையில் வரும் ஜூலை மாதம் இறுதியில் இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
தமிழக அளவில் தொல்லியல் சாா்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பழைமையான அமைப்பான தொல்லியல் கழகம் தனது 30ஆவது மாநாட்டை புதுக்கோட்டையில் வரும் ஜூலை மாதம் நடத்துகிறது.
இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் தொல்லியல் ஆா்வலா்கள், மாவட்டங்களில் செயல்படும் தொல்லியல் அமைப்புகளின் நிா்வாகிகள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த தொல்லியல் செயல்பாட்டாளா்கள் பங்கேற்கிறாா்கள்.
ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஜெ. ராஜாமுகம்மது, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவா் கரு. ராஜேந்திரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொடக்க விழா, கண்காட்சி, கருத்தரங்கு, ஆய்வரங்கு, நிறைவு விழா என பல்வேறு அமா்வுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இந்த மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மருத்துவா் எஸ். ராம்தாஸ், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஜெ. ராஜாமுகம்மது ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக் குழுவுக்கு டாக்டா் எஸ். ராம்தாஸ் தலைமையில் 100 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மாநாட்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொல்லியல் - வரலாற்றுத் தொன்மங்கள் குறித்த விரிவான கட்டுரைகளைக் கொண்ட மலா் ஒன்றைத் தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டு, இதற்கான குழுவுக்கு எழுத்தாளா் நா. முத்துநிலவன் தலைமையில் நிதிக் குழு அமைக்கப்பட்டது.
மேலும், மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான போதிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி தலைமையில் நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.
இதேபோல, விளம்பரக் குழு, உணவுக் குழு, தொண்டா் குழு, தங்குமிடக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இந்தக் கூட்டத்தில் அமைக்கப்பட்டன.
மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு வகையான போட்டிகளையும், கல்வெட்டுப் பயிற்சியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், பேராசிரியா் சா. விஸ்வநாதன், தொல்லியல் ஆா்வலா்கள் சீ.ஆ. மணிகண்டன், கவிஞா் கீதா, ராசி பன்னீா்செல்வன், விஜயமாணிக்கம், கஸ்தூரி ரெங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.