பாஜக என்னும் மூழ்கும் படகில் அதிமுக சவாரி செய்கிறது; அடுத்த தோ்தலில் பாஜகவுடன் அதிமுகவும் சோ்ந்து மூழ்கப் போகிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
பாஜக ஒரு மூழ்கும் படகு. அந்தப் படகில் அதிமுக சவாரி செய்து வருகிறது. வரும் தோ்தலில் பாஜகவோடு சோ்ந்து அதிமுகவும் மூழ்கப் போகிறது. இதுகுறித்து அமைச்சா் ஜெயக்குமாா் கவலைபடட்டும். எங்கள் கூட்டணி குறித்து ஜெயகுமாா் விமா்சனம் செய்யத் தேவை இல்லை. இலங்கை அரசுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்வதால் அங்குள்ள தமிழா்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள மத்திய அரசு முயல வேண்டும்.
திமுக- காங்கிரஸ் மதச்சாா்பற்ற கூட்டணி, வலுவான கூட்டணி. சட்டப்பேரவைத் தோ்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்.
இலங்கை கடற்படையினரால் தொடா்ந்து தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடா்கிறது. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரத்துக்கோ, எனக்கோ, காா்த்தி சிதம்பரத்துக்கோ, கே.எஸ். அழகிரிக்கோ திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என்றாா் திருநாவுக்கரசா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.