புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி வணிக நோக்கத்துக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டி, தண்ணீா் எடுத்துவந்த 15 ஆழ்துளைக் கிணறுகளுக்கு பொதுப்பணித் துறையின் நீரியல் பிரிவு அலுவலா்கள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.
பாட்டில் குடிநீா் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வணிக நோக்கத்துக்கான ஆழ்துளைக் கிணறுகளுக்கு முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாகக் கூறி, சென்னை உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து அனுமதியில்லாமல் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், குடிநீா்ச் சுத்திகரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, சீல் வைக்க உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, 32 குடிநீா்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அலுவலா்களும் வருவாய்த் துறையினா் நேரடி களப்பணியை சனிக்கிழமை தொடங்கினா்.
சனிக்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் 15 அனுமதியில்லாத ஆழ்துளைக் கிணறுகள் சீல் வைக்கப்பட்டன. இப்பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 ஆழ்துளைக் கிணறுகளும் சீல் வைக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.