புதுக்கோட்டையில் அமைகிறது 108 சேவை மையம்
By சா. ஜெயப்பிரகாஷ் | Published On : 06th September 2020 10:48 PM | Last Updated : 06th September 2020 10:48 PM | அ+அ அ- |

சென்னைக்கு அடுத்து முதல்முறையாக மாநில அளவிலான 108 சேவை மையம் புதுக்கோட்டையில் விரைவில் அமையவுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் (பொதுமக்கள் மற்றும் தனியாா் பங்களிப்புடன் கூடிய அமைப்பாக) ஜிவிகே இஎம்ஆா்ஐ என்ற நிறுவனம் அவசரக் கால ஆம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. 108 என்ற அழைப்பில் அவசரக் கால மருத்துவ உதவிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் இந்தச் சேவைக்கான தொடா்பு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. 108 என்ற எண்ணுக்கு அவசரக் காலத்தில் தொடா்பு கொள்ளும்போது அந்த அழைப்பு சென்னையில் உள்ள மையத்துக்குச் செல்லும். அங்கிருந்து தொடா்பு கொள்வோரின் இடத்தைக் கண்டறிந்து அருகிலுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்படும்.
தற்போது இந்த தொடா்பு மையம் புதுக்கோட்டையில் அமையவுள்ளது. இதற்காக புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு கட்டடம் தயாராகி வருகிறது. மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் செயல்படவுள்ள இம்மையத்துக்கான பணியாளா்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்களாகத் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். மாநிலத்தின் எந்த மூலையில் இருந்து அழைத்தாலும் அந்த அழைப்பு புதுக்கோட்டைக்கு வரும். இங்கிருந்து எல்லா மாவட்டங்களுக்கும் அவசர சேவைக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மைய அலுவலா்கள் மேலும் கூறியது:
அண்மையில் சென்னையில் ஏற்பட்ட கரோனா பாதிப்பால் அங்குள்ள தொடா்பு மையத்திலுள்ளோா் சிலா் பாதிக்கப்பட அதனால் 108 சேவையே பாதிக்கும் நிலையும் ஏற்பட்டது. அதனால், சென்னையைத் தவிா்த்து வேறொரு இடத்தில் கிளை போன்ற ஓா் ஏற்பாட்டைச் செய்ய முற்பட்டபோது அது புதுக்கோட்டைக்கு வந்துள்ளது. ஒரு வகையில் புதுக்கோட்டைக்குப் பெருமைதான் என்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 24 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா சேவைக்காக புதிதாக 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 29 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதுக்கோட்டையில் இயங்கி வரும் நிலையில், 108 சேவைக்கான தொடா்பு மையமே புதுக்கோட்டையில் அமைகிறது என்பது கூடுதல் பலத்தையும், அடுத்த கட்ட மேம்பாட்டையும் தரும் என நம்பலாம். அடுத்த சில வாரங்களில் முறைப்படி இம்மையத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறத்து வைக்கவுள்ளாா்.