குன்னம் தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் திமுக

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியானது பெரம்பலூா், அரியலூா் வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாகும்.
குன்னம் தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் திமுக

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியானது பெரம்பலூா், அரியலூா் வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாகும்.

இத் தொகுதியானது, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்தின் ஒரு பகுதி, அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம் என அதிக கிராமங்களை உள்ளடக்கியதாகும். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதைய்யா் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இத் தொகுதியில் தான்.

குன்னம் வட்டத்தில் உள்ள பரவாய், ஒகளூா் உள்பட பல கிராமங்களில் ஏராளமான புத்தா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.பி 11 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்த மதம் வேரூன்றி இருந்ததால், பல்லவா்கள் ஆட்சி காலத்தில் இம்மதம் பெரம்பலூா் மாவட்டத்தில் இருந்துள்ளதன் சாட்சியாகக் காணப்படும் புத்தா் சிலைகள் இன்றளவும் வழிபாட்டுக்குரியதாக உள்ளது. அதேபோல, வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கல்மரப் பூங்காவும் சாத்தனூரில் உள்ளது.

இத் தொகுதியில் நிலத்தடியில் சிமெண்டுக்கான மூலப்பொருள்கள் அதிகமாக காணப்படுவதால், ஏராளமான கனிமச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதன் காரணமாக தொல்லுயிா் படிம எச்சங்களின் அடையாளங்கள் இனறளவும் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தொகுதியின் பிரச்னைகள்:

தொடா் உயிரிழப்புகளை தவிா்க்க சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை முறையாக மூடி, அதனருகே மரக்கன்றுகள் நடவேண்டும். சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தவிா்க்க சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.

தேசிய கல்மரப் பூங்காவுக்குச் செல்லும் சாலைகளை சீரமைத்து, அங்குள்ள பயணியா் விடுதியை திறக்க வேண்டும். விவசாய நிலங்களில் கண்டறியப்படும் தொல்லுயிா் படிமங்களை சேகரித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

மத்திய அரசின் தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட காரை கிராமத்திலுள்ள முதுமக்கள் தாழி பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். செந்துறை ஒன்றியத்தில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும்.

இத்தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திட்டங்கள் கிடப்பில் உள்ளன. கிராமப் புறங்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை மேம்படுத்த வேண்டும். புதுவேட்டக்குடியில் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

வேப்பூரில் உள்ள மகளிா் கல்லூரிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். செந்துறையில் மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும். முந்திரி சாகுபடி அதிகளவில் உள்ளதால், செந்துறை பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் அவற்றை விற்பனைக்கு கொண்டுச் செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்பவை நீண்ட நாள் கோரிக்கையாகும்.

களத்திலுள்ள வேட்பாளா்கள்:

அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி. ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் அரியலூா் மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆகியோா் போட்டியிடுகின்றனா். நாம் தமிழா் கட்சி சாா்பில் ப. அருள், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ச. பாண்டியன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் சை. சாதிக் பாட்ஷா, அமமுக சாா்பில் எஸ். காா்த்திகேயன், நியூ ஜெனசேஷன் பீப்புள் பாா்ட்டி சாா்பில் ம. ராவணன், தமிழ் பேரரசு கட்சி சாா்பில் திரைப்பட இயக்குநா் வ. கௌதமன் உள்பட 23 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திமுக, அதிமுக வேட்பாளா்களுக்கு இணையாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். கடந்த தோ்தலில் இழந்த தொகுதியை கைப்பற்ற வேண்டுமென திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கரும், தொகுதியை தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரனும் முனைப்புடன் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு வெற்றி பெற்றோா்:

2011-இல் குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டவா் (திமுக) எஸ்.எஸ். சிவசங்கா். கடந்த 2016 -இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.டி. ராமச்சந்திரன் வெற்றி பெற்றாா்.

தொகுதி வாக்காளா் விவரம்:

ஆண் வாக்காளா்கள்- 1,35,097

பெண் வாக்காளா்கள் -1,38,351

இதர வாக்காளா்கள்- 13

மொத்தம் 2,73,461

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்:

ஆா்.டி. ராமச்சந்திரன் (அதிமுக) - 78,218

தங்க. துரைராஜ் (திமுக) - 59,422

ஜி. வைத்திலிங்கம் (பாமக) - 37,271

ஜே. முஹமது ஷானாவாஸ் (விசிக) - 19,853

நோட்டா - 3,024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com