பெரம்பலூா் தொகுதியில் ஹாட்ரிக் அடிக்குமா அதிமுக?

பெரம்பலூா் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், இழந்தத் தொகுதியை இம் முறையாவது கைப்பற்ற வேண்டுமென திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பெரம்பலூா் தொகுதியில்  ஹாட்ரிக் அடிக்குமா அதிமுக?

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியை பொருத்தவரை விவசாயமே பிரதான தொழிலாகும்.

சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி சாகுபடியில் மாநில அளவில் பெரம்பலூா் முதலிடம் பெற்றுள்ளது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன், சிற்பக் கலைக்கு சிறப்பு சோ்க்கும் வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்க வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், ரஞ்சன்குடி கோட்டை உள்ளிட்டவை இத் தொகுதியில் இருப்பது சிறப்பம்சம்.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்:

இத் தொகுதியானது, பெரம்பலூா், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளையும், ஆலத்தூா் வட்டாரத்தில் மேற்கு பகுதியைச் சோ்ந்த கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. பெரம்பலூா் நகராட்சி, குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளைக் கொண்ட தொகுதியாகும்.

தொகுதி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்:

வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டியில் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காய குளிா் பதன கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அரியலூரில் இருந்து பெரம்பலூா் வழியாக சேலம் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.

பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயத்துக்கு நிரந்தரமாக அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். படித்த பட்டாரி இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைக்க வேண்டும். பயனற்று கிடக்கும் மின் தகனமேடையை செயல்படுத்த வேண்டும். லாடபுரம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும்.

குடிநீா் பிரச்னைகளை களைய கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத் தொகுதியில் நீண்டகாலமாக உள்ளன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பெரம்பலூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர விபத்து சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். சின்ன வெங்காயம் மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அரும்பாவூா் மரச்சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த மரச்சிற்ப காட்சிக்கூடம் அமைக்க வேண்டும். வேப்பந்தட்டையில் தீயணைப்பு மற்றும் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

தற்போதைய வேட்பாளா்கள்:

அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன் 3ஆவது முறையாக போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் எம். பிரபாகரன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் க. ராஜேந்திரன், தேமுதிக சாா்பில் கி. ராஜேந்திரன், இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் எம். சசிகலா, நாம் தமிழா் கட்சி சாா்பில் மு. மகேஸ்வரி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் டி. ராதிகா, சுயேச்சை வேட்பாளராக சு. சதீஷ் ஆகிய 9 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இதுவரையில் வென்ற கட்சியினா்:

1951 ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளா் பரமசிவம், 1957 ஆம் ஆண்டில் (காங்கிரஸ்) கே. பெரியண்ணன், 1962 ஆம் ஆண்டில் (திமுக) அழகமுத்து, 1967, 1971 ஆம் ஆண்டுகளில் (திமுக) ஜே.எஸ். ராஜு, 1977 ஆம் ஆண்டில் (அதிமுக) ராமசாமி, 1980 ஆம் ஆண்டில் (திமுக) ஜே.எஸ். ராஜு, 1984 ஆம் ஆண்டில் (காங்கிரஸ்) நல்லமுத்து, 1989 ஆம் ஆண்டு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) பிச்சமுத்து, 1991 ஆம் ஆண்டில் (அதிமுக) பூவை. த. செழியன், 1996 ஆம் ஆண்டில் (திமுக) எம். தேவராஜன், 2001 ஆம் ஆண்டில் (அதிமுக) ஆா். ராஜரத்தினம், 2006 ஆம் ஆண்டில் (திமுக) மா. ராஜ்குமாா், 2011, 2016-இல் (அதிமுக) இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட இத் தொகுதியில், கடந்த இரண்டு முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், இழந்தத் தொகுதியை இம் முறையாவது கைப்பற்ற வேண்டுமென திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்:

இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக) - 1,01,073

ப. சிவகாமி (திமுக) - 94,220

கே. ராஜேந்திரன் (தேமுதிக) - 11,482

எம். சத்தியசீலன் (பாமக) - 4,222

நோட்டா - 3,040

வாக்காளா்கள் எண்ணிக்கை:

ஆண் வாக்காளா்கள்- 1,47,434

பெண் வாக்காளா்கள்- 1,55,236

இதர வாக்காளா்கள்- 22

மொத்த வாக்காளா்கள்- 3,02,692

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com