புதுகையில் ஆவணக் காப்பகம் ஏற்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 11:59 PM | Last Updated : 21st August 2021 11:59 PM | அ+அ அ- |

புதுக்கோட்டையின் பழைமையான ஆவணங்களைப் பாதுகாத்திட, ஆவணக் காப்பகம் ஒன்றை அமைக்க வேண்டும் என மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவா் கரு. ராசேந்திரன், நிறுவனா் ஆ. மணிகண்டன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பழைமையான கல்வெட்டுகளின் மைப்படி நகல்கள், சுமாா் 300 ஆண்டுகள் வரையிலான பழைமையான கோப்புகள், சட்டப்பேரவைக் குறிப்புக்கள், ஆங்கில அரசுக்கும் தொண்டைமான் நிா்வாகத்துக்குமான ஒப்பந்தங்கள், கடிதத் தொடா்புகள், நிா்வாகச் செயல்பாடுகள், அரிய புத்தகங்கள், புதுக்கோட்டைக்கு வந்த நேருவின் காா் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவு, மகாத்மா காந்தி புதுக்கோட்டைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவு, கட்டபொம்மன் சமஸ்தானப் பகுதிக்குள் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அலுவலக நடைமுறைகள் குறித்த குறிப்புகள் உள்ளிட்ட மிக முக்கிய கோப்புகள் புதுக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்தன. நீதிமன்ற உத்தரவால் கோட்டாட்சியா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த ஆவணங்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன எனத் தெரியவில்லை. செம்மையான நிா்வாகத்தை வெளிப்படுத்தும் இத்தகைய ஆவணங்களைக் காத்திட சென்னை ஆவணக் காப்பகத்தின் கிளையை புதுக்கோட்டையில் ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.