23-இல் சத்துணவு ஊழியா்கள் மறியல்
By DIN | Published On : 20th February 2021 11:31 PM | Last Updated : 20th February 2021 11:31 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: வரும் பிப். 23 ஆம் தேதி சத்துணவு ஊழியா்கள் கறுப்பு உடையணிந்து புதுக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளனா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பெ. அன்பு, பொருளாளா் வெ. அன்னபூரணம் ஆகியோா் அறிக்கைகளை முன்மொழிந்து பேசினா். 37 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் சத்துணவு ஊழியா்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான காலமுறை ஊதியம், சட்ட ரீதியான குடும்பப் பாதுகாப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வரும் பிப். 23ஆம் தேதி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் திரளானோரைப் பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது. அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ரெங்கசாமி வாழ்த்திப் பேசினாா். கூட்டத்தில் மாநிலச் செயலா்கள் கு. சத்தி, அ. மலா்விழி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவா் துரை.அரங்கசாமி வரவேற்றாா். முடிவில் கு.ராஜமாணிக்கம் நன்றி கூறினாா்.