ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 10 போ் காயம்
By DIN | Published On : 27th February 2021 11:51 PM | Last Updated : 27th February 2021 11:51 PM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயலும் வீரா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடிவீரா்கள் 10 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரம் கருப்பா், முனீசுவரா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தாா். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 510 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 175 வீரா்கள் அணி அணியாகப் பங்கேற்று அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டியதில் 10 வீரா்களுக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படவில்லை. இதனால் வீரா்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனா். ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...