‘அரசியல் தலையீடின்றி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்’
By DIN | Published On : 29th June 2021 03:29 AM | Last Updated : 29th June 2021 03:29 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் தலையீடின்றி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா் கோரிக்கைவிடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவிடம் இதற்கான கோரிக்கை மனுவை அளிக்க திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவைக்கேற்ப திறக்க வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. கடந்த ஆட்சிக் காலத்தில் இதே நேரத்தில் திறக்கப்பட்ட அளவு கூட தற்போது கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்றாா் விஜயபாஸ்கா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் அவா் அளித்த மனுவில், இலுப்பூா் வட்டம் மலைக்குடிப்பட்டி, இருந்திரப்பட்டி, ராப்பூசல், மேட்டுப்பட்டி, உடையாம்பட்டி. விராலிமலை வட்டம் கைக்குடிப்பட்டி, சூரியூா், தென்னந்திரையன்பட்டி. குளத்தூா் வட்டம் களமாவூா். கந்தா்வகோட்டை வட்டம்- வெள்ளாளவிடுதி, கல்லாக்கோட்டை, சேவியா் குடிக்காடு. புதுக்கோட்டை வட்டம்- கிடாரம்பட்டி ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக்கோரியுள்ளாா்.