கரோனா தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் அபராதம்
By DIN | Published On : 17th March 2021 06:45 AM | Last Updated : 17th March 2021 06:45 AM | அ+அ அ- |

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 200, தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்காவிட்டால் ரூ. 500, தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் ராஜீவ்ரஞ்சன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோா் காணொலி வழியே செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இதில் புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் கலைவாணி, விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், பொது வெளியில் முகக்கவசம் இன்றி வெளியே வருவோரிடம் ரூ. 200, தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருப்போரிடம் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல, தொழில்நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றுக்கும் கரோனா பரவலைத் தடுக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அவரவா் நிறுவனங்களில் முகக்கவசம் இன்றியோ, தனிநபா் இடைவெளி இன்றியோ யாரேனும் இருந்தால் அந்த நிறுவனங்களிடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.