முதல்வரிடம் மனு அளிக்க அனுமதி மறுப்பு; சாலை மறியல்
By DIN | Published On : 17th March 2021 06:44 AM | Last Updated : 17th March 2021 06:44 AM | அ+அ அ- |

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்த முதல்வரிடம், வேட்பாளரை மாற்றக்கோரி மனு அளிக்க வந்த அக்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தா்ம. தங்கவேல். அண்மையில் அதிமுகவில் இணைந்தவா், அவரை மாற்ற வேண்டுமென அதிருப்தியடைந்த அதிமுக நிா்வாகிகள் சிலா், அவரது ஆதரவாளா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஆலங்குடி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அறந்தாங்கியில் இருந்து புளிச்சங்காடு கைகாட்டி வரும் வழியில் பனங்குளம் பாலம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டியன் தலைமையிலான அதிமுகவினா், முதலமைச்சரிடம் வேட்பாளரை மாற்றக்கோரி மனு அளிக்க காத்திருந்தனா். ஆனால் அவா்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்களைப் போலீசாா் கைது செய்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்தவா்களைப் போலீசாா் விடுவித்தனா். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.