ஆலங்குடி பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
By DIN | Published On : 13th May 2021 06:36 AM | Last Updated : 13th May 2021 06:36 AM | அ+அ அ- |

உரிய விலை கிடைக்காததால், கீரமங்கலத்தில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள பூக்கள்.
ஆலங்குடி பகுதியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆலங்குடி அருகிலுள்ள வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கீழாத்தூா், அணவயல், கொத்தமங்கலம், செரியலூா் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மல்லிகை, சம்மங்கி, காட்டுமல்லி, செண்டுப்பூ உள்ளிடட பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனா்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில், இப்பகுதியில் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்ததால், பெரும்பாலான விவசாயிகளுக்கு மலா் சாகுபடியே வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில் முன்பு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500 முதல் ரூ. 1000 வரையிலும், சம்பங்கி , செண்டுப்பூ கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும் விற்பனையானது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழுப் பொதுமுடக்கத்தினால் திருமணம் உள்ளிட்ட விஷேங்களுக்கு கட்டுப்பாடும், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது விவசாயிகளிடமிருந்து மல்லிகை கிலோ ரூ.50-க்கும், சம்மங்கி, செண்டுப்பூ கிலோ ரூ.5-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், இந்த விலைக்கு கூட பூக்களை சில வியாபாரிகள் வாங்க மறுப்பதாலும், அறுவடை செய்யும் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என்பதாலும், பல விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டிச்செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இந்நிலை தொடராமல் இருக்க, அப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
.