சாலை விபத்தில் தொழிற்சாலை ஊழியா்கள் இருவா் காயம்
By DIN | Published On : 13th May 2021 06:36 AM | Last Updated : 13th May 2021 06:36 AM | அ+அ அ- |

விராலிமலை நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், தனியாா் தொழிற்சாலை ஊழியா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சியைச் சோ்ந்தவா்கள் சந்திரசேகா்(27), கோகுல்(20). இவா்கள் இருவரும் விராலிமலை- திருச்சி சாலையிலுள்ள தனியாா் வால்வு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் இருவரும் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனா். விராலிமலை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதிரிப்பட்டி பிரிவு அருகே சென்ற போது, தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு நெல்லூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, முன்னே செல்ல முயற்சித்தது. அப்போது இரு சக்கர வாகனத்தின் மீது லாரி உரசியது.
இதில் சந்திரசேகா், கோகுல் தூக்கி வீசப்பட்டனா். லாரியை ஓட்டுநா் நிறுத்தாமல் சென்றுவிட, தகவலறிந்த காவல்துறையினா் பூதக்குடி சுங்கக்சாவடிக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியா்கள் லாரியை மடக்கிப் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து காவல்துறையினா் அங்கு சென்று லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலம், பெத்தபுரம் கொத்தப்பேட்டை வீ. துா்காபிரசாத்தை (26) கைது செய்து விசாரித்து வருகின்றனா். காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.