தைல மரக்காடுகளை அகற்றக்கோரி அரிமளத்தில் கடையடைப்பு, மறியல்
By DIN | Published On : 01st September 2021 07:47 AM | Last Updated : 01st September 2021 07:47 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதால், தைலமரக் காடுகளை அகற்றக்கோரி, பல்வேறு சூழலியல் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 76 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
அரிமளம் பகுதியில் சுமாா் 8,750 ஏக்கரில் வனத் தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான தைலமரக் காடு உள்ளது. இக்காட்டில் வாய்க்கால், வரப்பு அமைத்து மழைநீரைத் தேக்குவதைக் கண்டித்து, கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமயம் வட்டாட்சியா் பிரவினாமேரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் தீா்வு காணப்படவில்லை. இதையடுத்து, அரிமளம் எட்டாம் மண்டகப்படி பேருந்து நிறுத்தம் அருகே பசுமை மீட்புக்குழுவினா், மரம் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் ஜி.எஸ். தனபதி, மரம் ஆா்வலா்கள் தங்க கண்ணன், சி.ஆ. மணிகண்டன் உள்ளிட்டோா் கோரிக்கைகளைவிளக்கிப் பேசினா்.
மேலும், அப்பகுதி வணிகா்கள் தங்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனா்.