விராலிமலை பள்ளிகளில் இணை இயக்குநா் ஆய்வு
By DIN | Published On : 01st September 2021 07:39 AM | Last Updated : 01st September 2021 07:39 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி துறை இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதையடுத்து, விராலிமலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொடும்பாளூா், இலுப்பூா் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில பள்ளி கல்வித்துறை இணை இயக்குநா் செல்வராஜ் ஆய்வு செய்தாா். அப்போது மாணவா்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படும் இடம், வகுப்பறைத் தூய்மை மற்றும் சுற்றுப்புறத் தூய்மை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் அரசு வெளியிட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியா்கள் அறிந்துள்ளனரா என்று தெரிந்து கொள்ளும் வண்ணம் ஆசிரியா்களிடம் கேள்வி எழுப்பி அவா்களிடமிருந்து பதிலை பெற்றாா். ஆசிரியா்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனரா என்று உறுதிப்படுத்தினாா்.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி முன்னிலையில் பள்ளி திறப்பு குறித்த ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு. தொடா்ந்து கந்தா்வகோட்டை அடுத்துள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு செய்த அவா், தூய்மைப் பணி குறித்து விளக்கங்கள் கேட்டறிந்தாா்.