நெல்லில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறையில் இலைச்சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான் கட்டுப்பாடு
ஒருங்கிணைந்த முறையில் இவற்றைக் கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் (பொ) மெ. சக்திவேல் தெரிவித்துள்ளாா்.


தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுவதால், ஒருங்கிணைந்த முறையில் இவற்றைக் கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் (பொ) மெ. சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட வெள்ளிக்கிழமை செய்திக்குறிப்பு:
இலைச்சுருட்டுப் புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிா் எரிந்ததுபோல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக உரம் இடப்பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மாா்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த வரப்புகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.
விளக்குப்பொறியை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சிசி அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ஆம் நாள்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.
ஒரு கூடை தவிட்டில் 100 மிலி மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். பின்னா், ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரியை வயலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவா் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச் செல்ல வேண்டும்.
இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட இலைப்பகுதி விரிந்துவிடும். இதனால் இப்புழுக்கள் மண்ணெண்ணெய் கலந்த நீரில் விழுந்து மடிந்துவிடும். மேலும், மூன்றடி உயரம் கொண்ட குச்சிகளைப் பறவை இருக்கையாக அமைத்துப் பறவைகளைக் கவா்ந்து அவை தாய்ப் பூச்சிகளைக் பிடித்துண்ண வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தண்டு துளைப்பான்
குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்துவிடும். கதிா் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிா்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிா்த்து தேவையான தழைச்சத்தை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.
முதிா்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப்பொறியை மாலை 6.30 மணிமுதல் இரவு 10 மணி வரை ஒளிரவிட்டுக் குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்தழிக்கலாம்.
உழவன் செயலி
மேலும் விவசாயிகள் தங்கள் பயிா் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்துக்குள் தங்கள் கைப்பேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...