கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 22nd December 2022 12:05 AM | Last Updated : 22nd December 2022 12:05 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கருப்பையா (45) அவரது தம்பி பழனிச்சாமி (42) ஆகிய இருவருக்கும், அரிமளம் சாமிநாதன்பிள்ளை தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் (35) மற்றும் கருப்பையா (30) ஆகியோருக்கும் இடையே கடந்த 2015-இல் ஏற்பட்ட தகராறில் இந்திரா நகரைச் சோ்ந்த கருப்பையா வயிற்றில் திருப்புளியால் குத்திக கொலை செய்ய முயன்றனா். இச்சம்பவத்தில் அரிமளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜன் மற்றும் கருப்பையாவைக் கைது செய்தனா்.
புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அரிமளம் சாமிநாதன்பிள்ளை தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மற்றும் கருப்பையா ஆகிய இருவருக்கும், கொலை முயற்சி குற்றத்துக்காக தலா 7 ஆண்டுகள், கொலை மிரட்டல் குற்றத்துக்காக தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி டி. ஜெயகுமாரி ஜெமி ரத்னா தீா்ப்பளித்தாா். இந்த சிறைத் தண்டனைகளை குற்றவாளிகள் இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.