ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 47 போ் காயம்
By DIN | Published On : 27th February 2022 12:27 AM | Last Updated : 27th February 2022 12:27 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரம் கருப்பா், முனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கவிதாராமு தலைமையில், போட்டியை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், 626 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 279 மாடு பிடி வீரா்கள் கலந்துகொண்டு அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டியதில் 47 வீரா்களுக்கு காயம் ஏற்பட்டது.
அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் முதலுவதவி சிகிச்சை அளித்தனா். அவா்களில், பலத்த காயமடைந்த 22 போ் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீரா்களின் பிடியில் சிக்காமல் போக்குக்காட்டிய காளைகளுக்கும், திமிரிய காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், மத்திய விலங்குகள் நலவாரியக்குழு உறுப்பினரும், ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே.மிட்டல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, எம். சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றுப் பாா்வையிட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.