நீட் நுழைவுத் தோ்வு:7.5 % இடஒதுக்கீடு: தரவரிசையில் புதுகை மாணவா் முதலிடம்
By DIN | Published On : 26th January 2022 07:58 AM | Last Updated : 26th January 2022 07:58 AM | அ+அ அ- |

தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவா் ஐ. சிவாவைப் பாராட்டிய ஆட்சியா் கவிதா ராமு.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ், இளநிலை நீட் நுழைவுத் தோ்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாணவரை ஆட்சியா் கவிதா ராமு நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த சிலட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஐ. சிவா, 514 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதலிடம் பிடித்துள்ளாா். இம் மாணவரை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
மாணவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோா் ஐயப்பன்- புனிதா தம்பதியினருக்கும், மாணவரின் ஆசிரியா்களுக்கும் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவா் சிவா, தேசியத் திறனாய்வுத் தோ்வில் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளாா். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளாா். சிறந்த மாணவருக்கான காமராஜா் விருதைப் பெற்றுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...