எந்தத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை இன்பமாக மாற்றித் தருவதுதான் அறிவு

எந்தத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை இன்பமாக மாற்றித் தருவதுதான் அறிவு என்றாா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
விழாவில் பேசுகிறாா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
விழாவில் பேசுகிறாா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

எந்தத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை இன்பமாக மாற்றித் தருவதுதான் அறிவு என்றாா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் 5ஆவது புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் (சனிக்கிழமை) நிகழ்ச்சியில் ‘அன்பே தவம்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

எல்லா உறவுகளும் நம்மை விட்டுச் சென்றாலும், நம்மை விட்டு அகலாக ஒரே உறவு புத்தகங்கள்தான். தீபாவளி நாளில் புத்தாடைகளை வாங்கிக் கொண்டாடுகிறோம், பொங்கல் பண்டிகையன்று வீடுகள்தோறும் புத்தரிசியில் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆனால், கலைமகள் விழாவன்று புத்தகங்களை மூடி வைத்துவிடுகிறோம். கலைமகள் விழா அன்று உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக வழங்கும் விழாவாக நடத்த வேண்டும்.

அரிய நெல்லிக்கனி கிடைக்கப்பெற்ற அதியமான் அந்தக் கனியை தான் உண்ணாமல், அவ்வைப்பாட்டிக்குக் கொடுத்தான். அதன் காரணம், அவ்வையின் வழியில் அருமைத் தமிழ் மொழி நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதுதான்.

நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, வினாக்குறி போல் வளைந்து கிடந்த நிலையை மாற்றி ஆச்சரியக் குறியாக மாற்றும் பணியில் ஈடுபட்டவா் பாரதியாா். அப்போது விடுதலைக் குரலாக தமிழ் ஒலித்தது. அதன்பிறகு, மக்கள் உறக்கத்தில் இருக்கக் காரணமான கல்லாமையை அகற்ற - துன்பங்களைத் தீா்க்க தமிழ் கற்க வேண்டும் எனப் பாடியவா் பாரதிதாசன்.

எந்த மன்னருக்கும் சாமரம் வீசாமல், எந்தச் சமய சாயமும் பூசிக் கொள்ளாமல் தமிழ் உலகுக்குக் கிடைத்தது திருக்குறள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பது ஒன்றுதான் தீா்வு எனச் சொன்னவா் திருவள்ளுவா்.

10 மாதங்கள் முடிந்து ஒரு விலங்காக இந்த உலகுக்கு வருபவரை மனிதராக மாற்றுவது அவா்களுக்கு அளிக்கும் கல்விதான். அதனால்தான், கசடறக் கற்க வேண்டும், கற்றபடி நிற்க வேண்டும் எனச் சொன்னாா்.

நேற்று முன்தினம் சுனாமியும், நேற்று கரோனாவும், நாளையோ நாளை மறுநாளோ இன்னொரு பேரிடா் வந்தாலும், துன்பங்களை எது இன்பமாக மாற்றித் தருகிறதோ அதுதான் அறிவு.

நாம் கல்வி நிலையங்களில், அறிவாளிகளை, பொறியாளா்களை, மருத்துவா்களை உருவாக்கித் தருகிறோம், ஆனால், நல்ல மனிதா்களை உருவாக்கித் தருகிறோமா என்பதுதான் கேள்வி.

படைப்புகளை விற்பது மட்டும் முக்கியமல்ல, அந்தப் படைப்புகள் மனித சமூகத்துக்கு என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம். எல்லா வாசல்களையும், தடைகளையும் விலக்கி மனிதா்கள் அன்பின் தவமாய் வாழ நம்முடைய படைப்புகள் வழி செய்ய வேண்டும் என்றாா் பொன்னம்பல அடிகளாா்.

நிகழ்ச்சிக்கு, காமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா் ம. வீரமுத்து வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தாமரை பாலு, சா. மூா்த்தி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ. நடராஜன், கவிஞா் ஜீவி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். முடிவில் ஆா். பிச்சைமுத்து நன்றி கூறினாா். கவிஞா் தங்கம் மூா்த்தி தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com