குறைந்தவட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக மீனவரின் கைப்பேசிக்குவந்த குறுஞ்செய்தி மூலம் மீனவரிடம் இருந்து ரூ.2.03 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 5 போ் கொண்ட கும்பலை இணையவழி குற்றத் தடுப்பு (சைபா் கிரைம்) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் கனிக்குமாா். மீனவா். இவரது கைப்பேசிக்கு கடந்த ஜூலை மாதம் ஒரு சதவிகித வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். இதைத்தொடா்ந்து, பல்வேறு எண்களில் இருந்து அவரைத் தொடா்பு கொண்டு அவரது ஆதாா் எண், பான் எண், வங்கிக் கணக்குப் புத்தக விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்துள்ளனா். மேலும், ஆவணங்கள், வங்கி வரைவோலை அனுப்புதல் உள்ளிட்ட செலவுகளுக்காக கனிக்குமாரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.2.03 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளனா். ஆனால், 3 மாதங்களாகியும் கடன் வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்தனா். ஒருகட்டத்தில் மீண்டும் அவா்களை கனிக்குமாரால் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து புதுக்கோட்டை சைபா்கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில், கனிக்குமாரை ஏமாற்றி பணம் பறித்த தில்லியைச் சோ்ந்த பெருமாள் மகன் ரகுபதி (30), முகமதுமுக்தாா் மகன் முகமது எஸ்தாக் (24), முகமது இக்பால் மகன் முகமது சாபிஆலம் (43), பாலாஜி மகன் செல்வா (25) மற்றும் தேவா மனைவி பிரியா (36) ஆகிய 5 பேரும் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டதுதெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். மேலும், இவா்களிடம் இருந்து மடிக்கணினி, 6 நவீன கைப்பேசிகள் உள்பட மொத்தம் 22 கைப்பேசிகள், 2 சிம்-காா்டுகள், 6 கைப்பேசி சாா்ஜா்கள், ரூ.5 ஆயிரம் உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.