தனியே இருந்த பெண்ணை கொன்ற இளைஞா் கைது
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருமயம் அருகே தனியே வசித்து வந்த பெண் கொல்லப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அதே வீட்டுக்கு சில நாள்களுக்கு முன் சிசிடிவி கேமரா பொருத்த வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை திருமயம் அருகே புதுமனை ஆரோக்கியபுரம் தேவாலயம் அருகே தனியே வசித்து வந்த வசந்தா (62) என்ற பெண் கடந்த 17ஆம் தேதி கொல்லப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அதன் கணினிப் பொருள்கள் உள்பட அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா், அதே வீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு சிசிடிவி கேமரா பொருத்திய நபரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா்.
இதில் திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த அம்மாசி மகன் சிவகுமாா் (27) என்பவா்தான் சிசிடிவி பொருத்திய நபா் என்பதும், அவரேதான் பிறகு வீட்டுக்குள் புகுந்து வசந்தாவைக் கொன்று, நகையைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து சிவகுமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 செல்போன்கள், 16 பவுன் தங்கநகை உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினா்.