மனிதநேய ஜனநாயகக்கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th September 2022 11:39 PM | Last Updated : 26th September 2022 11:39 PM | அ+அ அ- |

கறம்பக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையைக் கண்டித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் இருப்பதில்லை. பகல் நேரங்களிலும் ஒரு மருத்துவா் மட்டும் பணியில் இருந்து புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், உரிய மருத்துவ வசதி கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்காளாகி வருகின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்டச் செயலா் எம். முகமது ஜான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் செல்லச்சாமி, மாநில துணை செயலா் என்.துரைமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.