மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு ரூ. 2.40 லட்சத்தில் தையல் இயந்திரங்கள்
By DIN | Published On : 18th April 2023 03:08 AM | Last Updated : 18th April 2023 03:08 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 30 பேருக்கு தையல் இயந்திரங்களை திங்கள்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுள்ள மற்றும் அறிவுசாா் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி சிறாரின் பெற்றோா் 30 பேருக்கு ரூ. 2.40 லட்சத்தில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
குறைகேட்பு நாளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 361 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், கலால் உதவி ஆணையா் எம். மாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செ. உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.