இளைஞா் கொலையைக் கண்டித்து மறியல்
By DIN | Published On : 18th April 2023 02:39 AM | Last Updated : 18th April 2023 02:39 AM | அ+அ அ- |

அன்னவாசலில் திருமணத்திற்கு மீறிய உறவால் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரையும் கைது செய்யக் கோரி இறந்தவரின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவ ராசு மகன் முத்துக்குமாருக்கும் (30) அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் ராசாத்திக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது. இதையறிந்த ராசாத்தியின் மகன் வெற்றிவேல் கடந்த 13ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதனால் ஆத்திரத்திரமடைந்த ராசாத்தியின் உறவினா்கள் அருகிலுள்ள முத்துக்குமாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தகராறு செய்து அவரை ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனா்.
தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா் முத்துக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இதுதொடா்பாக ராசாத்தி (38), பாலாமணி (40), அன்னப்பூரணி (33), சந்தோஷ்குமாா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான சண்முகம், முருகேசன், நாகராஜ் உள்ளிட்டோரைத் தேடுகின்றனா்.
இந்நிலையில் இந்தக் கொலையில் தொடா்புடைய மற்ற மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி முத்துகுமாரின் உறவினா்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.