பொன்னமராவதியில் மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை திறப்பு
By DIN | Published On : 25th April 2023 01:30 AM | Last Updated : 25th April 2023 01:30 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மருத்துவமனை நிறுவனா் எஸ். பெரியண்ணன் தலைமை வகித்தாா். விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மருத்துவமனையை திறந்துவைத்து பேசும்போது, நாட்டிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழக முதல்வரின் ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டம் மொத்தம் 685 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை விபத்துகளில் சிக்கிய 1 லட்சத்து 57 ஆயிரம் போ் காப்பாற்றப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தமிழக அரசு ரூ. 140 கோடி செலவழித்துள்ளது. இதேபோல், முன்னாள் முதல்வா் கருணாநிதி நலிவுற்ற ஏழைகளை காக்கும் பொருட்டு கொண்டு வந்த காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்றாா்.
விழாவில், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராமு, ஓய்வு பெற்ற நீதிபதி தியாகராஜன், பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனையானது, அதிநவீன வசதிகளுடன் 50 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் நவீன வகையிலான இரண்டு அறுவைச் சிகிச்சை அரங்குகள், சிடி ஸ்கேன் , டயாலிசிஸ் கருவி, ஐசியு, இஜிஜி, அல்ட்ராசவுண்ட் , டிஜிட்டல் எக்ஸ்ரே என அனைத்து வசதிகளையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.