அபரிமிதமான நிலத்தடி நீரை கொண்டிருந்தது புதுக்கோட்டை!

ஒரு காலத்தில், காவிரியாறு மூன்று வழிகளில் பாய்ந்து அபரிமிதமான நிலத்தடி நீரைக் கொண்ட பகுதியாக புதுக்கோட்டை இருந்திருக்கிறது என்றாா் எழுத்தாளா் நக்கீரன்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் பேசிய எழுத்தாளா் நக்கீரன்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் பேசிய எழுத்தாளா் நக்கீரன்.
Updated on
1 min read

ஒரு காலத்தில், காவிரியாறு மூன்று வழிகளில் பாய்ந்து அபரிமிதமான நிலத்தடி நீரைக் கொண்ட பகுதியாக புதுக்கோட்டை இருந்திருக்கிறது என்றாா் எழுத்தாளா் நக்கீரன்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சொற்பொழிவில், ‘சுற்றுச்சூழலும் புதுக்கோட்டையும்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

ராஜராஜ வளநாட்டுப் பன்றியூா் என்ற பெயா் புதுக்கோட்டைக்கு இருந்திருக்கிறது. பன்றிகள் இருந்த காடு என்றால், அந்த ஊா் எந்தளவுக்கு வளமுடன் இருந்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாா்க்க வேண்டும்.

தமிழ் நிலப்பகுதியில் கண்டறியப்பட்ட கற்றளிக் கோவில்களில் அதிகமானவை தஞ்சை மாவட்டத்திலுள்ளன. அத்தனைக் கற்களையும் தந்த பகுதி புதுக்கோட்டைப் பகுதி. இங்குள்ள குன்றுகள் எல்லாம் அப்போது அழிக்கப்பட்டன. அநேகமாக முதல் குவாரி புதுக்கோட்டைப் பகுதியில்தான் இருந்திருக்கக் கூடும். அத்தனை வளம் நிறைந்த பகுதிகள் குவாரிகளால் அழிந்தன.

ஒரு காலத்தில் மண் உப்பு அதிகமாக இருந்த பகுதி புதுக்கோட்டைப் பகுதி. கடல் உப்பை விட விலை குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், கடல் உப்பைவிடவும் மென்மையாகவும் இருந்த மண் உப்பு, சமஸ்தானமாக இருந்த காலத்தில் 175 இடங்களில் எடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

அறந்தாங்கிப் பகுதியில் இப்போதும் நரசிங்கக் காவிரி என்ற பெயரில் ஆறு இருக்கிறது. குடகில் உற்பத்தியாகும் காவிரியாறு, ஒரு காலத்தில் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் வழிதான் கடலில் கலந்திருக்கிறது. அதன்பிறகு பாலாற்றின் வழியே, கடலில் கலந்திருக்கிறது. அதனைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளாற்றின் வழியே மணமேல்குடியிலும், அதன்பிறகு அம்புலியாற்றின் வழியே சேதுபாவாசத்திரத்திலும், அதன்பிறகு அக்னியாற்றின் வழியே அதிராம்பட்டினத்திலும் காவிரி கடலில் கலந்திருக்கிறது. அத்தனை வளம்மிக்க புதுக்கோட்டைதான் இப்போது தைலமரக்காடுகளால் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.

புதுக்கோட்டை வறட்சியான மாவட்டம் அல்ல; நிறைய தியாகங்களைச் செய்த மாவட்டம் என்பதுதான் சரி என்றாா் நக்கீரன்.

முன்னதாக ‘என்னை வழிநடத்திய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, ‘கதைகளின் கதை’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பவா செல்லதுரை ஆகியோரும் பேசினா். நிகழ்ச்சிக்கு, மூத்த மருத்துவா் ச. ராம்தாஸ் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com