அன்னவாசல் அரசு மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை
By DIN | Published On : 09th August 2023 01:40 AM | Last Updated : 09th August 2023 01:40 AM | அ+அ அ- |

விராலிமலை: அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நோயாளிகளுக்கு குடலிறக்கம் மற்றும் குடல் வளரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஜாபா் கான் (34). இவா், கடந்த சில மாதங்களாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தாா். இதேபோல் விராலிமலை ஒன்றியம், மாங்குடி பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா்(15) என்ற சிறுவன் குடல்வளரி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இதனையடுத்து அன்னவாசல் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் மணியன் ஆலோசனையின்பேரில், இருவரும் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்துவந்தனா். இதைத்தொடா்ந்து, முதன்மை மருத்துவ அலுவலா் மணியன் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணா் முகமது ஹனிப், மயக்க மருந்து நிபுணா் கீதாஞ்சலி மற்றும் செவிலியா்கள் ஜாபா்கான், சசிக்குமாா் ஆகிய இருவருக்கும் முறையே குடலிறக்க அறுவை சிகிச்சை, குடல் வால் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா்.
இதுகுறித்து அன்னவாசல் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் மணியன் மேலும் கூறியது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக ஜாபா்கான், சசிக்குமாா் ஆகிய இருவருக்கும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக குடலிறக்கம் மற்றும் குடல் வளரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றாா்.