

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘இந்திர தனுஷ் 5.0’ என்றசிறப்பு தடுப்பூசி போடும் திட்டத்தை முழுமையாக அமலாக்கிட கிராம ஊராட்சித் தலைவா்கள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கேட்டுக் கொண்டாா்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான 3ஆவது காலாண்டுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
நாடு முழுவதும் நடைபெற்று வரும் ‘இந்திர தனுஷ் 5.0’ என்ற சிறப்புத் தடுப்பூசி முகாம், புதுக்கோட்டையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வரும் ஆக. 18-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், செப். 11ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், அக். 9 ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை மூன்றாம் கட்டமாகவும் நடத்தப்படவுள்ளது.
5 வயதுக்குள்பட்ட சிறாா்கள் மற்றும் தாய்மாா்களுக்கு இந்தத் தடுப்பூசி முகாம் சென்றடையும் வகையில் முழுமையாக கண்காணிப்புப் பணிகளில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஈடுபட வேண்டும்.
மேலும், முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்காக மாவட்டம் முழுவதும் 220 இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் மின்சார வசதி, குடிநீா் வசதி போன்றவையும் அமைக்க ஊராட்சி மன்றத் தலைவா்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மொ்சி ரம்யா.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் இளங்கோ தாயுமானவன், உதவித் திட்ட அலுவலா் கணபதி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.