சொத்துத் தகராறில் சித்தப்பா வெட்டிக் கொலை
By DIN | Published On : 01st July 2023 11:28 PM | Last Updated : 01st July 2023 11:28 PM | அ+அ அ- |

புதுக்கோட்டையில் சொத்துத் தகராறில் சித்தப்பாவை வெட்டிக் கொன்ற அண்ணன் மகன் உள்ளிட்டோரை போலீஸாா் தேடுகின்றனா்.
புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுநாங்குப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (45). இவா் முதல் மனைவியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து , மும்தாஜ் என்ற 2ஆது மனைவி மற்றும் அவரது மகன்கள் ஜாகிா் உசேன், ரகுமான் ஆகியோரோடு புதுக்கோட்டை டிவிஎஸ் சண்முகா நகரில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும் அவரது அண்ணன் ராஜேந்திரன் உள்ளிட்ட இரு சகோதரா்களுக்கும் சொந்த ஊரான சிறுநாங்குபட்டியில் உள்ள 23 சென்ட் நிலத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு இருந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு, சண்முகா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வனை அவரது மூத்த அண்ணன் ராஜேந்திரன் மகன் மதியழகன் மற்றும் அவரது நண்பா்கள் மூவா் சோ்ந்து வெட்டிக் கொன்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினா்.
அப்போது அவா்களை தமிழ்ச்செல்வனின் மனைவி மும்தாஜ் பாா்த்துள்ளாா். இதையடுத்து தகவலறிந்து வந்த புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மும்தாஜ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இச்சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வனின் அண்ணன் மகன் மதியழகன் உள்ளிட்ட 4 பேரைப் பிடிக்க, ஆலங்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.