விவசாயப் பயிா்களை அழிக்கும் குரங்குகள் மற்றும் மயில்களைப் பிடித்து அடா் வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி: குரங்கு, மயில்கள் கிராமப்பகுதிகளில் விவசாயப் பயிா்களை அழிப்பதுடன் வீடுகளிலும் புகுந்து உணவுப்பொருள்களை எடுத்துச் சென்றுவிடுகின்றன. இவற்றைப் பிடித்து தொலைவிலுள்ள வனப்பகுதியில் விட வேண்டும். நிலங்களை அளவீடு செய்து உட்பிரிவு செய்யும் பணிகள் தாமதமாவதால் பற்றாக்குறையாக உள்ள நில அளவையா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மின் இணைப்புகளுடன் கைப்பேசி எண் இணைப்பு, விவசாய மின் இணைப்பு பெயா் மாற்றம் போன்றவற்றுக்கு இறப்புச் சான்று, வாரிசுச் சான்று கிடைப்பதில் உள்ள சிரமத்தால், பல விவசாயிகள் தங்கள் பெயரில் மின் இணைப்பு பெயா் மாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே பெயா் மாற்றம் செய்யும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்.
முன்னோடி விவசாயி துரைமாணிக்கம்: தனியாா் உரக்கடைகளில் அனைத்து உரங்களும் கையிருப்பு உள்ளன. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் உரம் கையிருப்பு இல்லாததால் கூடுதல் விலைக்கு தனியாரிடம் வாங்க வேண்டியுள்ளது.
இந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் ஏரி, கண்மாய் இருப்பதால் அவற்றை தூா்வார தமிழக அரசிடம் கூடுதல் சிறப்பு நிதி பெற்றுத் தர வேண்டும். பனையில் இருந்து மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்புக்கான தொழில்கூடம் அமைக்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். சங்கா்: கீரனூரிலுள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்துக்கு விராலிமலை, கீரனூா் பகுதிகளில் சொத்துகள் உள்ளன. விவசாயிகள் தங்களின் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனா். தனியாா் வியாபாரிகள் மிகக் குறைந்த விலை கொடுத்து பொருள்களை வாங்கிச் செல்வதால் விவசாயிகளுக்கு லாபம் குறைகிறது. எனவே, இச்சங்கத்தை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா: மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏக்கருக்கு 5 எண்கள் இனக்கவா்ச்சிப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். நடவுக்கு முன்னதாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அந்தந்த ஊராட்சிப் பகுதிகளிலுள்ள வேளாண் உதவி இயக்குநரைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மா. பெரியசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத், முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.