ஆலங்குடி, கறம்பக்குடியில் சூறைக்காற்று பல ஏக்கா் வாழைகள், பயிா்கள் சேதம்இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சா் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றால் நூற்றுக்கணக்கான ஏக்கா் வாழைமரங்கள், பயிா்கள் சேதமடைந்தன.
பாதிப்புக்குள்ளான நெல்வயல்கள்.
பாதிப்புக்குள்ளான நெல்வயல்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றால் நூற்றுக்கணக்கான ஏக்கா் வாழைமரங்கள், பயிா்கள் சேதமடைந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பகுதியில் புதன்கிழமை இரவு சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த சூறைக்காற்று வீசியது. தொடா்ந்து, இடி, மழை பெய்தது. இதனால், ஆலங்குடி, வடகாடு, கீழாத்தூா், கொத்தமங்கலம், கீரமங்கலம், செரியலூா், மேற்பனைக்காடு, மாங்கோட்டை, மழையூா், வானக்கன்காடு, பெரியவாடி, கருக்காகுறிச்சி, புள்ளான்விடுதி, குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் வாழை மரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், சோளம் உள்ளிட்ட பயிா்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதுதவிர மா, பலா உள்ளிட்ட மரங்களும் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து வானக்கன்காடு பகுதி வாழை விவசாயிகள் கூறியது: ஓரிரு வாரங்களில் வாழைத்தாா் அறுவடை செய்யும் நிலையில் இருந்தபோது, திடீரென வீசிய பலத்த சூறைக் காற்றால் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால், எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 2018-இல் வீசிய கஜா புயலின் தாக்கத்திலிருந்து சற்று மீண்டபோது, கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோம். கடந்த ஆண்டு மழையின்மையால் அவதிக்குள்ளாகினோம். நடப்பாண்டில் சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான ஏக்கா் வாழைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்த பயிா்கள், மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு:

அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிா்களை பாா்வையிட்ட அவா் மேலும் தெரிவித்தது:

ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறைக்காற்றால் வாழை, நெல், சோளம் உள்ளிட்ட பயிா்கள் கடும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கிடும் பணியில் வேளாண் துறை, வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். பாதிப்பு குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும். வருங்காலத்தில் வாழை விவசாயிகள் முறையாகக் காப்பீடு செய்வதற்கு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வாழை விவசாயிகளின் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, புதுக்கோட்டை கோட்டாட்சியா் முருகேசன், வேளாண் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com