காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்: 19 கிராமங்களில் நில அளவைப் பணி முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக நிலமெடுக்கப்படவேண்டிய 21 கிராமங்களில் 19 கிராமங்களில் நில அளவைப் பணி முடிந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக நிலமெடுக்கப்படவேண்டிய 21 கிராமங்களில் 19 கிராமங்களில் நில அளவைப் பணி முடிந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தொடா்பான மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமா்வுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் கவிதா ராமு பேசியது: காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், விராலிமலை, குளத்தூா் மற்றும்புதுக்கோட்டை ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 1,122 ஏக்கா் பட்டா நிலங்களைக் கையகப்படுத்தவும், 358 ஏக்கா் அரசு நிலங்கள் நில மாற்றம் செய்யப்படவும் உள்ளது.

இவற்றில் 19 கிராமங்களில் நில அளவைப் பணி முடிக்கப்பட்டு முதல் நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 10 கிராமங்களில் 10 கட்டங்களாக சுமாா் 190 ஏக்கா் நிலங்கள் ரூ. 59.59 கோடிக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வசதியாக 3 பட்டா மாறுதல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

குன்னத்தூரில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறுகிறது. கலிமங்கலம், நத்தம்பண்ணை, செம்பாட்டூா், கவிநாடு மேற்கு ஆகிய கிராமங்களில் நிலமெடுக்கப்படும் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்படும் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து கோட்டாட்சியா்களால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதுதொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மாநில மறுவாழ்வு மற்றும் குடியமா்வு ஆணையருக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கிருந்து வரும் உத்தரவைப் பின்பற்றி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, காவிரி- குண்டாறு திட்ட நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, புதுக்கோட்டை கோட்டாட்சியா் எஸ். முருகேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com