பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் முதல்கட்ட அகழாய்வுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்து, அதுகுறித்த வரைபடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். அகழாய்வுக்குத் தோ்வு செய்யப்பட்டுள
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்து, அதுகுறித்த வரைபடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். அகழாய்வுக்குத் தோ்வு செய்யப்பட்டுள

புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் முதல்கட்ட அகழாய்வுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

மாநில நிதித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இப்பணியைத் தொடங்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

பொற்பனைக்கோட்டை பின்னணி

இரும்புக் காலத்தில் இந்தப் பகுதியில் 17 ஏக்கரில் கோட்டையும், 1.26 ஏக்கரில் வாழ்விடப்பகுதியும் அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோட்டை 2.5 கிமீ சுற்றளவையும், பாதுகாப்பு அரண் 5.66 ஏக்கரையும் கொண்டது. கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மூன்று நுழைவு வாயில்கள், 32 கோட்டைக் கொத்தளங்கள் காணப்படுகின்றன. கோட்டையின் நான்கு புறங்களிலும் முனீஸ்வரன் மற்றும் கருப்பன் கோயில்களும் கோட்டையின் உள்புறத்தில் நீராழிக் குளமும் உள்ளது. அதனருகில் வாழ்விடப் பகுதி இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரும்பை உருக்கிய எச்சங்கள் தெற்குப் பகுதியில் காணப்படுகின்றன.

ஏற்கெனவே இங்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பேரா. இனியன் தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்றது. அப்போது தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட பானையோடுகள், சதுரங்க ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், எலும்பு ஆயுதங்கள், வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு முன் தமிழி எழுத்துப் பொறிப்பு பெற்ற கிபி 4ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வீரக்கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்ற தொல்லியல் சான்றுகள் அடிப்படையில் தமிழகத் தொல்லியல் துறை இங்கே அகழாய்வை நடத்த முடிவு செய்து, மத்திய தொல்லியல் துறையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, தொல்லியல் துறை இயக்குநா் சே.ரா. காந்தி, இணை இயக்குநா் இரா. சிவானந்தம், ஆலோசகா் பேரா. க. ராஜன், பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநா் த. தங்கதுரை, தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

புதுகை அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்

மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறுகையில், ஏற்கெனவே கீழடியில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொருநையில் அருங்காட்சியகம் அமைக்க ரூ. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம், தஞ்சையில் சோழா்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, அகழாய்வு நடைபெறும் இடங்களில் கிடைக்கும் பொருள்களின் அளவைக் கொண்டு இதர பகுதிகளிலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். தொல்லியல் துறைக்கு போதுமான அளவுக்கு முதல்வா் நிதி ஒதுக்கி வருகிறாா். புதுக்கோட்டை அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com