விவசாயி மா்மச் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மீண்டும் மறியல்
By DIN | Published On : 22nd May 2023 03:58 AM | Last Updated : 22nd May 2023 03:58 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி பகுதியில் கிணற்றில் விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகே வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ஆா். ரவி (50). இவா், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்திலுள்ள கிணற்றில் இறந்து கிடந்தாா்.
அவரது சாவில் மா்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை பிற்பகலில் நீண்ட நேரம் கறம்பக்குடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து, இறந்தவரின் உடல், கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா்.
தொடா்ந்து மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே தஞ்சாவூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன் பின்னா் பொதுமக்கள் கலைந்து சென்றனா். உடற்கூறாய்வு நடைபெற்றுள்ள நிலையில், திங்கள்கிழமை ரவியின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.