கந்தா்வகோட்டையில் நுங்கு விற்பனை அதிகரிப்பு
By DIN | Published On : 22nd May 2023 03:56 AM | Last Updated : 22nd May 2023 03:56 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் இரண்டு நாள்கள் மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். ஆனால், மழைக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய பணிக்காக வெளியில் வருபவா்களும் குடை எடுத்துவரும் நிலையில் உள்ளனா். அனைத்து குளங்களும் நீா் இல்லாமல் வட நிலையில் உள்ளது. இதனால், ஆடு, மாடுகள் நீரின்றி மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது குறைந்துவிட்டது.
இந்த நிலையில், பேருந்து நிலையத்துக்கு வரும் மக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நுங்கு, இளநீா், வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கி செல்கின்றனா்.
நுங்கு என்பது இயற்கை நமக்கு கொடுத்த மாபெரும் கொடையாகும்.எந்தவித ரசாயன மருந்தும் இல்லாமல் விளையக்கூடியது என்பதால், இப்பகுதி மக்கள் நுங்கு வாங்கி சென்று சாப்பிட்டு வருகின்றனா். மேலும் ஜூஸ் செய்து அருந்துகின்றனா்.
வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பதால், இப்பகுதியில் இளநீா், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சுக்கு நல்லதொரு மவுசு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.