கூட்டுறவு வங்கிப் படிவங்களை தமிழில் அச்சிடக் கோரிக்கை
By DIN | Published On : 22nd May 2023 04:01 AM | Last Updated : 22nd May 2023 04:01 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டக் கூட்டுறவு வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் பயன்படுத்தப்படும் படிவங்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ் என்ற நிலை வேண்டும் என்பது நமது ஆசை. ஆனால், தமிழை வளா்க்க வந்த கட்சிகளின் ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் கூட தமிழ் இல்லை.
வங்கிக் கணக்குப் புத்தகம் முதல் பணம் செலுத்தும் செலுத்து சீட்டு வரை அனைத்திலும் ஆங்கிலமே இருக்கிறது. இதை எல்லாம் தமிழ் தேசியவாதிகள் கண்டுகொள்வதில்லை. மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்கிறது என்றால், மாநில அரசு ஆங்கிலத்தை திணிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக தமிழகத்திலுள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் நடைமுறைகள் அனைத்தும் தமிழில் இருக்கும் வகையில் உத்தரவிட்டு, படிவங்களைத் தமிழில் அச்சிட்டு புழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.