வடகாட்டில் கோடை கலை இலக்கியத் திருவிழா
By DIN | Published On : 22nd May 2023 04:02 AM | Last Updated : 22nd May 2023 04:02 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் கோடை கலை இலக்கியத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
வடகாடு தாய்த்தமிழ் பள்ளி வளாகத்தில் சங்கத்தின் கிளைத் தலைவா் எஸ்.டி.பஷீா் அலி தலைமையில் நடைபெற்ற கோடை கலை இலக்கியத் திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 200 போ் கலந்து கொண்டனா்.
வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா். நீலா, மாவட்டச் செயலா் ஸ்டாலின் சரவணன், மாவட்டத் தலைவா் ராசி. பன்னீா்செல்வன், பொருளாளா் ஜெயபாலன், முன்னாள் மாவட்டச் செயலா் சு. மதியழகன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கருப்பையன், கவிஞா்கள் வடிவேல், வம்பன் செபா, தமிழரசன் உள்ளிட்டோா் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.