முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டையைச் சோ்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 216 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

புதுக்கோட்டையைச் சோ்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 216 பக்க குற்றப் பத்திரிகையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் சுமாா் 8 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தாா்.

இவா் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா். அப்போது, 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 2021 மாா்ச் 31ஆம் தேதி வரையில் ரூ. 27.22 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, இவா்களுக்கு தொடா்புள்ள 56 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த காலங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனைக்குப் பிறகு, இவ்வழக்கின் குற்றப் பத்திரிகையை, புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொ) ஜெயந்தி முன்னிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியும், துணைக் காவல் கண்காணிப்பாளருமான இமயவரம்பன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

216 பக்கங்களைக் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிகையுடன் 800-க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் இணைத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், 56 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குப் பிறகு, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி வரை ராசி புளூ மெட்டல்ஸ், ராசி என்டா்பிரைசஸ், வி இன்டா்னேஷனல், நிலம், தொழில் முதலீடு, இயந்திர தளவாடங்கள், ஆபரணங்கள் என வாங்கியது கண்டறியப்பட்டு, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com