சுமை ஆட்டோ - பைக் மோதல்: வடமாநில தொழிலாளி பலி
By DIN | Published On : 24th May 2023 03:41 AM | Last Updated : 24th May 2023 03:41 AM | அ+அ அ- |

பொன்னமராவதியில் சுமை ஆட்டோ -இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், உம்ரேஷ் பகுதியைச் சோ்ந்த எஸ். மகேந்திரன் (34) பொன்னமராவதி ஜெ.ஜெ.நகா் பகுதியில் சக தொழிலாளா்களுடன் தங்கி கட்டடப் பணி செய்துவந்தாா். இந்நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை காலை சக தொழிலாளியும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹரிபாபுவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு எதிரே வந்த சுமை ஆட்டோ நேருக்கு நோ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மகேந்திரன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஹரிபாபுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சுமை ஆட்டோவை ஒட்டிவந்த ஓட்டுநா் க. நாகராஜ் காயமுற்று வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேந்திரன் உடலை மீட்டு வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.