3,391 பயனாளிகளுக்கு ரூ. 26 கோடியில் நல உதவிகள்

3,391 பயனாளிகளுக்கு ரூ. 25.67 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை, மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், 3,391 பயனாளிகளுக்கு ரூ. 25.67 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை, மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். 146 மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 10 கோடியில் கடனுதவிகள், கூட்டுறவு வங்கி மூலம் 218 பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மதிப்பில் கடனுதவிகள் உள்பட மொத்தம் 3,391 பயனாளிகளுக்கு ரூ. 25.67 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதாபாண்டே, நகா்மன்றத் தலைவி செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வுக் கூட்டம் முடிந்ததும், அவா் காா் மூலம் ஆலங்குடி சென்று, அங்கு திமுக பிரமுகா் ஆா். ரத்தினவேல் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். முன்னதாக, கீரனூா் சென்ற அவா், திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியனின் தந்தை அண்மையில் மறைந்த எஸ். கண்ணனின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினாா்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக புதுக்கோட்டை வந்த அமைச்சா் உதயநிதிக்கு, மாவட்ட எல்லையான சவேரியாா்புரம் பகுதியில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com