புதுக்கோட்டைக்கு அருகே அரிய தொல்லியல் சின்னங்களின் தொகுப்பாக உள்ள நாா்த்தாமலையை, வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
மாநிலத்திலேயே அதிகமான தொல்லியல் சின்னங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், சித்தன்னவாசல், திருமயம், கொடும்பாளூா் ஆகிய 3 இடங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மூன்று இடங்களிலும் மத்திய தொல்லியல் துறையின் சாா்பில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு, நடந்து செல்லும் பாதை, உணவகம், கழிப்பறை போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள பாதுகாவலா்கள் அந்த இடத்தின் வரலாற்றை, தங்களுக்குத் தெரிந்தவரை சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கி வருகின்றனா்.
இம்மூன்று இடங்களுக்கும் இணையான தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட நாா்த்தாமலை எவ்வித வசதிகளுமின்றி காணப்படுகிறது.
புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் - புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் இடதுபுறத்தில் திரும்பி சுமாா் 7 கி.மீ. உள்ளே சென்றால் 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜயாலய சோழீஸ்வரம் உள்ளது.
வடக்கு - தெற்காக நீண்டுள்ள மலையின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கற்கோவிலை முதலில் சாத்தம்பூதி என்ற மன்னா் கட்டி, மழையால் பின்னா் சிதைந்து போனதால், அதன்பிறகு மல்லன் விதுமன் என்னும் தென்னவன் தமிழ்த் திரையன் என்ற மன்னரால் புனரமைக்கப்பட்டதாகக் கூறுகிறாா் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
கற்கோவில் வளாகத்தில் 6 சிறிய சன்னிதிகள் உள்ளன. வட்டவடிவ விமானத்தில் காணப்படும் நாட்டிய மங்கைகளின் விதவிதமான சிற்பங்கள் தனித்துவமானவை.
பெரும்பாறைக்கு அடியில் ‘பதிணென்பூமி விண்ணகரம்’ என்னும் திருமால் குடைவரையும், தென்புறத்தில் ‘பழியிலி ஈசுவரம்’ என்னும் சிறிய குடைவரையும் உள்ளன என்கிறாா் மணிகண்டன்.
தரையிலிருந்து மெல்ல உயா்ந்து செல்லும் பெரும்பாறையில் (சறுக்குப்பாறை!) சுமாா் 800 மீட்டா் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது.
அருகே உள்ள உயா்ந்த மாமரம், கடும் வெயிலில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சற்றே இளைப்பாறுதலைத் தருகிறது.
சற்றே தள்ளி சுமாா் 50 மீட்டா் தொலைவில், ‘ஹஸ்ரத் நூா் முஹம்மத் மஸ்தான் ஒலியுல்லா தா்கா’ அமைந்துள்ளது. இங்கும் கணிசமான இஸ்லாமியா்கள் வந்து செல்கின்றனா்.
நாா்த்தாமலைக்குச் செல்வதற்கு முன்பாகவே, வலதுபுறத்தில் அருண்மொழித் தேவன் என்கிற ராஜராஜசோழனால் கட்டப்பட்ட ‘கடம்பா்’ கோவில் உள்ளது. இங்குள்ள மலைப் பாறை முழுவதும் ஏராளமான எழுத்துகள் சாசனங்களாக உள்ளன.
இந்த இடங்களில் சறுக்குப்பாதையில் நடந்து செல்வதற்கான கைப்பிடி, படிக்கட்டுகள் அமைத்து, பயணிகள் இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே நிழற்குடைகளுடன் இருக்கைகளை அமைக்கலாம். குடிநீா் உள்ளிட்ட உணவகம், கழிப்பறை வசதிகளும் செய்துதர வேண்டும்.
இவை எதுவும் இல்லாமலேயே தொல்லியல் ஆா்வலா்களும், விடுமுறை நாள்களில் இயல்பான மாவட்டத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் ரூ. 5 கோடி வரையில் மேம்படுத்தும் பணிகளுக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்தத் திட்டப் பணிக்கு அனுமதி மற்றும் நிதி பெறுவதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட நிா்வாகம் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து அரசுக்கு அனுப்பி உரிய அனுமதியை மத்திய தொல்லியல் துறையிட மிருந்தும் பெற்று வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.