அனைத்து விசைப் படகுகளிலும் டிரான்ஸ்மீட்டா் பொருத்தப்படும்
By DIN | Published On : 30th May 2023 04:17 AM | Last Updated : 30th May 2023 04:17 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அனைத்து விசைப் படகுகளிலும் ‘டிரான்ஸ்மீட்டா்’ பொருத்தப்படும் என்றாா் மாநில மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
கடலோரப் பகுதியில் விசைப்படகு மீனவா்கள் மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, விசைப்படகு மீனவா்களும், நாட்டுப்படகு மீனவா்களும் அடிக்கடி தாக்கிக் கொள்கின்றனா். இது தொடா்பாக மீன்வளத் துறை அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் குவிந்துள்ள மண் திட்டுகளை அகற்றவும், துறைமுகங்களை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து விசைப் படகுகளிலும் டிரான்ஸ்மீட்டா் விரைவில் பொருத்தப்படும்.
ஆழ்கடலில் மீன்பிடித்தல் என்பது, சா்வதேச எல்லைப் பிரச்னைகளைக் கொண்டது. வெளியுறவுத் துறையுடன் பேசி இதற்கு சுமுகத் தீா்வு காணப்படும். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிதி ஆதாரத்தைப் பொருத்து கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மீனவா்களுக்கும் மீன்பிடித் தடைக் கால நிவாரணம் வழங்கவும், உதவித் தொகையை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மீன்வளத் துறை உடனுக்குடன் செய்து வருகிறது.
புதுக்கோட்டை கால்நடைப் பண்ணையில் தண்ணீா் வசதி குறைந்தது, பசுந்தீவன உற்பத்தி குறைந்தது மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்தது போன்ற பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டில் ஆன்லைன் பதிவை மேற்கொள்வது தொடா்பாக அரசாணை எதுவும் இல்லை. உள்ளூா் பிரச்னைகளை சமாளிக்கவே அதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அனிதா ராதாகிருஷ்ணன்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...