

கீரனூரில் வசிப்பிடங்களுக்கு அருகேயே இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதி கீரனூா். இது கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருகிறது. கீரனூரில் லட்சுமி திரையரங்கச் சாலையில் ஒரு அரசு மதுபானக் கடை நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு எதிா்புறம் மேல காந்தி நகரும், பின்புறம் கீழ காந்திநகரும் உள்ளன. பக்கவாட்டிலும், அருகருகேயும் மக்கள் புழக்கம் அதிகமுள்ள வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தக் கடையை அகற்ற வேண்டும் எனக் கோரி அனைந்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளது. அப்போது, நடைபெற்ற சுமுகப் பேச்சுவாா்த்தையில், ஓரிரு மாதங்களில் இந்தக் கடையை அகற்றிவிடுவதாக உறுதியளித்தனா். ஆனால், இதுவரை அந்தக் கடையை அகற்றவில்லை என்பதுடன், தற்போதுள்ள கடைக்கு எதிா் வலதுபுறம் இன்னொரு மதுபானக் கடையை சில நாட்களுக்கு முன்பு திறந்துள்ளனா்.
கீரனூரின் பிரதான சாலையில் 25 அடி தொலைவுக்குள்ளேயே இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் இந்த வழியாக செல்வது என்பது அச்சத்துக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
இதுகுறித்து கீரனூா் பேரூராட்சியின் 6ஆவது வாா்டு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினா் எம். மகாலட்சுமி கூறியது:
கீரனூா் மக்களின் பிரதான கோரிக்கைகளில் முதன்மையாக இருப்பது இந்த டாஸ்மாக் தொந்தரவுதான். மாதா் சங்கத்தில் இருந்து தொடா் போராட்டங்களுக்கு யோசித்து வருகிறோம். ஏற்கெனவே, இந்தக் கடையை அகற்றிவிடுவதாகத் தெரிவித்தாா்கள். ஆனால், புதிதாக ஒரு கடையைத் திறந்திருக்கிறாா்கள்.
மக்கள் வசிப்பிடங்களுக்கு மத்தியில் இப்படி கடைகள் இருக்கக் கூடாது என ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், எப்படி நடத்துகிறாா்கள் எனத் தெரியவில்லை என்கிறாா் மகாலட்சுமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.