புதுகையில் ஆடிப்பெருக்கு
நீா்நிலைகளை வழிபடும் தமிழா் விழாவான ஆடிப்பெருக்கு (ஆடி 18) புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் பெண்கள் வாழை இலை விரித்து அதில் வெற்றிலை வைத்து மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைத்து வழிபாடு நடத்தினா்.
இலையில் மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு, காதோலை கருகமணி, வளையல், பூ, வாளான் அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை வைத்து இந்த வழிபாட்டை நடத்தினா். புதுமணத் தம்பதிகள் புதிய தாலிக்கயிறு மாற்றிக்கொண்டனா். அதேபோல் திருமணம் ஆக வேண்டி கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறை வீட்டில் உள்ள பெரியவா்கள் கட்டிவிட்டனா்.
பின் வெற்றிலையில் வைத்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு வாழைப் பட்டையில் வைத்து குளத்தில் மிதக்க விட்டனா். வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்கு கழுத்திலும் கட்டிவிட்டனா். இதனால் பல்லவன் குளத்துக்கு அதிகாலை முதலே மக்கள் வரத் தொடங்கினா்.
தொடா்ந்து மாலை நேரத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸாா் பணியில் ஈடுபட்டனா். ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

