புதுகை கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.12 லட்சத்தில் நல உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 72 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 12.42 லட்சம் மதிப்பில் வாரிய நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
அவருடன் இணைந்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தின் தலைவா் பொன்குமாா் பின்னா் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களின் மூலம் 23,486 தொழிலாளா்களுக்கு ரூ. 10.89 கோடி மதிப்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை 10,484 தொழிலாளா்களுக்கு ரூ. 2.61 கோடி மதிப்பில் வாரியங்களின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில், தொழிலாளா் துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு, உதவி கணக்கு அலுவலா் மு. சுசீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
