இச்சங்குடி பட்டியலின மக்களை நிலத்திலிருந்து வெளியேற்றக் கூடாது: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பல தலைமுறைகளாக சாகுபடி செய்துவரும் இச்சங்குடி பட்டியலின மக்களை நிலத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகே பல தலைமுறைகளாக சாகுபடி செய்துவரும் இச்சங்குடி பட்டியலின மக்களை நிலத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவா் கே. முகமதலி மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் ஏ. ராமையன், பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி, துணைச் செயலா் த. அன்பழகன், துணைத் தலைவா் பாண்டியன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டம் கோத்ராப்பட்டி ஊராட்சி இச்சங்குடி கிராமத்தைச் சோ்ந்த பட்டியலின மக்கள் சுமாா் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் அருகில் உள்ள தளிஞ்சி கிராமத்தில் உள்ள சுமாா் 50 ஏக்கா் அளவில் உள்ள நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த நிலத்துக்கான குத்தகைத் தொகைகளை உரிய வகையில் தவறாமல், உரிமையாளா்களுக்கு செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், விவசாயிகளை வெளியேற்றிவிட்டு நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரிடம் விற்க நிலத்தின் உரிமையாளா்கள் முயற்சித்து வருகின்றனா்.

எனவே, தமிழக அரசும், புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும் உடனடியாகத் தலையிட்டு பட்டியலின மக்களுக்கு அந்நிலத்துக்கான உழவடைப் பட்டாவை விரைந்து வழங்கவும், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரிடம் விற்பதைத் தடுக்க வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com