தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும்: கார்த்தி ப. சிதம்பரம்

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும் என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும் என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி, நான் தெரிவிக்கும் அத்தனைக் கருத்துகளையும் நான் சிந்தித்து சரியானது என உறுதியாக நம்பி சொல்லும் கருத்துகள்தான். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். விளக்கம் கேட்டு யாரும் எனக்கு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை. அவ்வாறு கடிதம் வந்த பிறகுதான் அதுகுறித்து பதில் சொல்ல முடியும். என்னை நோக்கி, உருவாக்கப்பட்ட சர்ச்சைதான்.

சிவகங்கையில் போட்டியிட திமுகவினரும், காங்கிரஸிலேயே சிலரும் முயற்சிப்பது குறித்து கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற போட்டிகள் இயல்புதான். உயிரோட்டமான காங்கிரஸ் கட்சியிலும் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் கேட்பதில் தவறு இல்லை. கடந்த தேர்தல் நேரத்திலும் இதேபோலத்தான் கேட்டார்கள். இப்போதும் கேட்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் கேட்பார்கள். இது இயல்பு.

என்னைப் பொருத்தவரை எம்பி பதவிக்குரிய பொறுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி வேலை செய்திருக்கிறேன். 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சமமாக நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறேன். மக்களவையிலும் அரசியல் சார்ந்து பேசியிருக்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். போட்டியிடுவதா வேண்டாமா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என கட்சி முடிவெடுத்து சொல்லும். அந்த முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்.

பிரதமரின் செல்வாக்கு குறித்து கேட்கிறீர்கள். ஆட்சியில் இருந்த ஒருவரின் செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. அதேநேரத்தில் ஹிந்தி பேசாத மாநிலங்களில் செல்வாக்கு குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுக தலைமையிலான- காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியதும், சமுதாயத்தைப் பிளந்ததும்தான் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனை. காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு அங்கே எத்தனைத் தொழில் வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன, எத்தனைப் பேருக்கு வேலைவாய்ப்புகளைத் தந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள புள்ளிவிவரப் புலிகள் விளக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.

பொதுவாக பொருளாதார வளர்ச்சியைப் பற்றிக் கணக்கிட வேண்டுமானால், விலைவாசி உயர்வு எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது, அதற்கேற்ப நம்முடைய ஊதியம் உயர்ந்திருக்கிறதா என ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். ஆனால், அப்படி எதுவும் உயரவில்லை என்பதை எல்லோரும் அறிவர் என்றார் கார்த்தி சிதம்பரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com